Description
நம் வாழ்விலும் ஏராளம் திரைகள் உண்டு. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், நம் வாழ்வும் ஆயிரமாயிரம் திரைகளை எதிர்கொள்ளவே வேண்டியுள்ளது. இனத் திரை, சாதியத் திரை, தேசியத் திரை, மதத் திரை, பிரதேசத் திரை, நிறவாதத் திரை இப்படி பல திரைகள். இந்தத் திரைகளுக்கு நிறந்தீட்டும் அதிகாரத் தரப்புகளின் தீவிர முனைப்பும் தொடர்ந்து உச்ச நிலையிலேயே உள்ளது. இந்தத் தீவிர முனைப்பை முறியடித்து, திரைகளை விலக்கும் முயற்சியில் மக்கள் ஓய்வில்லாமல் ஈடுபட வேண்டியிருக்கிறார்கள்.
இதன் நிமித்தமாக அவர்கள் சவால்களை ஏற்க வேண்டியுள்ளது. இங்கே ரிஷான் ஷெரீஃப், திரைகளை விலக்கும் ஒரு போராளியாக, ஒரு செயற்பாட்டாளராக, ஒரு முயற்சியாளராக இயங்குகிறார். ரிஷான் ஷெரீஃபின் தளம் இலக்கியமாகும். திரைகளை விலக்கும் அவருடைய கருவியும் இலக்கியமே.
திரைகளால் வகைப்படுத்தப்பட்ட உலகங்களின் உண்மைகளையும் யதார்த்தத்தையும் திரைவிலக்கிக் காண்பிப்பதே படைப்பாளிகளின் பொறுப்பாகும்.
இங்கே ரிஷான் ஷெரீஃப் விலக்கும் திரை என்பது சிங்களச் சமூகம் பற்றியது. இன்றைய தமிழ்மொழி பேசும்
சமூகங்களிடையே சிங்களச் சமூகம் பற்றிய புரிதலானது எதிர்மறை அம்சங்களையே அதிகமாகக் கொண்டது. அவ்வாறே தமிழ்மொழிச் சமூகங்களைப் பற்றிய சிங்களச் சமூகத்தின் புரிதலும். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு
மேலான இனமுரண்களின் வளர்ச்சி சமூக இடைவெளிகளை அதிகரித்து விட்டது. வரலாற்றுப் புனைவுகளும்
நிகழ்ச்சிகளும் இதற்கு மேலும் துணை செய்திருக்கின்றன.
— கருணாகரன்