Description
ரவிச்சந்திரன் அரவிந்தனின் கதைகளை வாசிக்கும்போது புத்தகப்பக்கங்கள் திரும்புவதற்கு பதில் ரத்தமும்
சதையுமான உணர்வுகள் நம்மை உரசிச் செல்கின்றன. வாழ்வின் நுன்ணுனர்வுகள் நம்மோடு உரையாடுகின்றன.
இந்த கொடுங்காலத்தில் நாம் அனுபவித்த வலி, இழப்பு, துயரம், காயம் என கொரானா நாட்களை எந்த பூச்சுமில்லாமல் ரணமாக அப்படியே படைப்பாக்கியிருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு பின்னும், நம் அடுத்த தலைமுறைக்கும் நாம் இக்காலங்களில் பட்ட துயரத்தை, தனிமையை, இழப்பை அறிய வைக்கும் ஆவணமாகவும் இந்த கதைகள் காலம் தாண்டும்.
கே.வி. ஷைலஜா
ரவிச்சந்திரன் அரவிந்தன்
மனிதரின் கருணை முகத்தையும் கள்ள முகத்தையும் ஒருசேர அடையாளம்
காட்டியது இந்த கொரானா காலம். ஒரு படைப்பாளியாக இந்தக் காலத்தைத் தன் கதைகளில் பதிவு செய்திருக்கிறார் அரவிந்தன்.
சமகாலத்தை, அதன் அசலான முகத்துடன் தன் கதைகளில் வரைந்திருப்பதற்காக அரவிந்தனைப் பாராட்ட வேண்டும். ஈரம் உலர்ந்த இக்காலத்தில் இத்தகைய உறவுகள் போற்றப்பட வேண்டும்.
மருத்துவர்களும் முன்களப்பணியாளர்களும் இந்தப் பெருந்தொற்றுக்காலத்தில் ஆற்றிய அரும்பணிகளையும் தியாகங்களையும் வாசக மனம் உணரும் விதமாக ஓர் உயிரோட்டமுள்ள ஜீவிய சரித்திரமாக இந்த கதைகளைப் படைத்திருக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் மருத்துவ மாணவர்களையும் தொற்றுக்குப் பலியாகிப் புதைக்கவும் இடம் மறுக்கப்பட்டு மாண்டுபோனவர்களையும் நாம் கடந்து வந்த கொடிய சமூக உளவியலையும் கொடுங்காலத்தையும் ஆவணப்படுத்தி வைத்த சாட்சியங்கள் இவை.
குழந்தைகள் கூடிக் கட்டிய சின்னஞ்சிறு மணல் வீடுகளை அடித்துச் செல்லும் ராட்சத அலைகளைபோல சுழன்றடித்த பெருந்தொற்றுக்காலப் பொருளாதார வீழ்ச்சி காவு கொண்ட எண்ணற்ற எளிய வாழ்க்கைப்பக்கங்கள் நம்முன் விரிகின்றன. சலசலக்கும் நீரோடை போலக் கடந்து செல்லும் இக்கதைகள் சமகால வாழ்வின் சில துயரார்ந்த பக்கங்களைப் பேசியிருக்கின்றன என்கிற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஈ.தமிழ்ச்செய்வன்